சென்னை: யுஜிசி வரைவு விதிமுறைகள் – 2025 தொடர்பான தேசிய மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இதில் கலந்து கொண்டு பேசியதாவது:- யுஜிசி சட்டம், 1956, பிரிவு 26-ன் கீழ் உருவாக்கப்பட்ட, பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள், மாநில பல்கலைக்கழக சட்டங்களை செயலிழக்கச் செய்யும் வகையில் உள்ளது. யுஜிசி உயர்கல்வியின் தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால் அதை மாநில அரசுகளால் அமல்படுத்த முடியாது. உயர்கல்வியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது.
சமீபத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 8,212 கோடி. இது முழு நாட்டிற்கும் மத்திய அரசின் மொத்த ஒதுக்கீட்டில் 17% ஆகும். மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசிக்காமல் கல்வி முறையில் புதிய விதிகளை விதிப்பது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) உட்பட அனைத்து பள்ளி வாரியங்களும் ஏற்கனவே பல தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்கின்றன.
அதிக போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகள், தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும். ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை மற்றும் மல்டிபிள் என்ட்ரி மற்றும் மல்டிபிள் எக்சிட் (MEME) ஆகியவை கல்வி முறையை சீர்குலைக்கும். மாநில அரசுகளுக்கு எதிரான இந்த விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு வலியுறுத்துகிறது.
இந்த விதிமுறைகளின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால், கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது ஆணவத்தின் உச்சம். மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடைக்காது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். இவ்வாறு கோ.செழியன் தெரிவித்தார்.