சென்னை: துணை ஆட்சியர், காவல்துறை டிஎஸ்பி உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டத் தேர்வு 15-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 போன்ற பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பொருத்தமான அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வை நடத்தி வருகிறது.
அந்த வகையில், குரூப் 1-ல் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டது. இதில் 28 துணை ஆட்சியர் பதவிகள், 7 காவல் டிஎஸ்பி பதவிகள், 19 வணிக வரி உதவி ஆணையர், 7 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள் மற்றும் 6 தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும், வனத்துறை உதவி பாதுகாவலர் பணியிடங்கள் 2-க்கான குரூப் 1ஏ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு ஏதேனும் இளங்கலைப் பட்டம் படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் இருவரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதற்கட்டத் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பணிகளில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான பொதுவான முதற்கட்டத் தேர்வு வரும் 15-ம் தேதி காலை நடைபெறும். தற்காலிகமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி அட்டை, தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை ஒரு முறை பதிவு செய்யும் தளத்தின் மூலம் மட்டுமே உள்ளிட்டு தேர்வுக்கூட அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.