தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கியமான சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் தனது உரையில், மக்களை நேரடியாக சேவைகள் வழங்கும் பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று கூறினார். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம் ஆகிய முக்கிய திட்டங்கள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த போது, தமிழகத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 500 துணை சுகாதார நிலையங்கள், 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தேவையென கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், மத்திய அரசு இதை பரிசீலிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அடுத்த கட்டமாக, 2025-26 ஆம் ஆண்டிற்காக 15வது நிதிக்குழுவிற்கு தேவையான புதிய கட்டிடங்களின் பட்டியல் விரைந்து தயாரிக்க வேண்டும். இந்த ஆண்டு டிசம்பருக்குள் பழைய நிலையில் உள்ள மருத்துவ கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், புதிய கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற முக்கிய உத்தரவை அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் 500 மையங்களை முதல்வர் தொடங்கிவைத்தார். கோயம்புத்தூரில் மேற்கொண்ட ஆய்வின்போது, இரண்டு மையங்களில் மருத்துவர்கள் இல்லாததை கவனித்ததாகவும், இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும் மாவட்டங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
நலவாழ்வு மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என நான்கு பணியிடங்கள் நிரம்பி இருக்க வேண்டும். காலியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மருத்துவ சேவைகளை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் எத்தனை பேர் பயன்பெற்று உள்ளனர் என்பதற்கான முழுமையான விவரங்கள் 2025 ஜூன் மாதத்திற்குள் அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.