சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவம்பர். 16, 17, 18, 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று தென்கிழக்கு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். மேற்கண்ட தினங்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.