தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்வதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மேலும் ஒரே வகையான வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி, ஏப்ரல் 4ம் தேதி, ஏப்ரல் 5ம் தேதி என தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நிலவரம் தொடரும் எனவும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஏப்ரல் 4ம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம். நாளை மீண்டும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெப்பநிலை அவ்வாறே இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.