சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 15 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதி, கோவை மாவட்டம், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கலாம்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள் இன்று. சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 7 செ.மீ., தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 7 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் 5 செ.மீ., சேலம் மாவட்டம் சந்தியூரில் 5 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 4 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், ஓசூர் மற்றும் பையூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.