தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான இதமான சூழல் நிலவியது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தெற்கு கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ.) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கோவை மாவட்டம், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை பதிவானது, அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தலா 9 செ.மீ., மதுரை விமான நிலையத்தில் தலா 7 செ.மீ., கோவிலங்குளத்தில் தலா 6 செ.மீ., விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.