ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
அதன்பின்னர் மழை குறைந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முத்தோரை பாலாடா, கப்பத்தோரை போன்ற புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் ஊட்டி வணிக சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
ஊட்டி நகரில் சேரிங் கிராஸ் பஸ் ஸ்டாப் பகுதி, கூட்ஷெட், ரயில்வே ஸ்டேஷன் பகுதி போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் மிதமான மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேணு, எஸ்.கைகாட்டி, கீழ்கோத்தகிரி, சோலூர் மடம், கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மிதமான மழை பெய்தாலும் குளிர் அதிகமாக இருந்தது.
மேலும் உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பகலில் முன்பக்க விளக்குகள் மற்றும் பக்கவாட்டு விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.