சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில், அவ்வப்போது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஆகிய இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், சென்னை மணலி நியூ டவுன் ஆகிய இடங்களில் 9 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிங்குடி, விழுப்புரம் மாவட்டத்தில் ஆனந்தபுரம், பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிகுளம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வத்தளை அணை ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.