சென்னை: விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற விடுமுறைகள், சனி, ஞாயிறு மற்றும் காலாண்டு விடுமுறைகள் காரணமாக, சென்னை மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தென் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர்.
விடுமுறை முடிந்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டதால், தெற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் நேற்று முதல் தொடர்ந்து சென்னை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள் கோயில் அருகே காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பகுதி, ஊரப்பாக்கம் பகுதி மற்றும் வண்டலூர் அருகே 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.