சென்னை: கடந்த 2017-ம் ஆண்டு சென்னையில் குடிசைவாசிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்து ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், “கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரை பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் குடிசைவாசிகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எந்த வசதியும் இல்லை,” என, குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த 4 இடங்களிலும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனரை நியமித்து 2018-ல் உத்தரவிட்டது.
இதன்படி, இந்த குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு கூட கஞ்சா தாராளமாக கிடைக்கிறது” என்று வழக்கறிஞர் கமிஷனர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”இந்தப் பகுதிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் கமிஷனர் தனது அறிக்கையில் குறிப்பிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
எங்கும் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா?
பள்ளிக் குழந்தைகள் போதைப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா அல்லது வேறு சுதந்திர அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. புறம்பாக்கம், கண்ணகி நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வக்கீல் கமிஷனரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
அதன்பிறகு, சென்னைக்கு உள்பட்ட குடிசைவாசிகள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், தாலுகா சட்டப் பணிகள் ஆணையம் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, செப்டம்பர் 9-க்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.