திருமலை: ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மாநில ஆர்டிசி பேருந்து நிலையத்தில் கடந்த 22-ம் தேதி இரவு அரசுப் பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி அதிகாலை பணிக்கு வந்த பஸ் டிரைவர் பஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்து உஷார்படுத்தினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்று முன்தினம் சீதாராமராஜ் மாவட்டம் சிந்தலூர் அருகே மாயமான அரசு பஸ் சாலையோரம் இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக நர்சிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸார் பேருந்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். மேற்கண்ட விசாரணையில் அவர் தமிழகத்தைச் சேர்ந்த சாதிக் என்பது தெரியவந்தது. இவர் விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த இவர், தனியார் பேருந்து நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா-2 படத்தைப் பார்த்துவிட்டு கடந்த 22-ம் தேதி இரவு ஆந்திர மாநிலம் நர்சிபட்டினம் ஆர்டிசி பேருந்து நிலையத்துக்கு சாதிக் வந்துள்ளார். அங்கு யாருக்கும் தெரியாமல் சாவியை வைத்து பேருந்தை கடத்தினார். விசாரணையில், சிந்தப்பள்ளி அருகே சென்றபோது தூக்கம் வந்ததால் பஸ்சை நிறுத்திவிட்டு தூங்கியது தெரியவந்தது. தொடர்ந்து சித்திக்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.