சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக கோவில்கள் உள்ளன. சிற்பக்கலைக்கு உதாரணமாகவும், நம் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் ஆயிரக்கணக்கான கோவில்கள் நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது கோவில்களை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை, இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்கூட்டிய திட்டங்களை தயாரித்து கோவில்களை பாதுகாக்க தவறி வருகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள கோவில்களின் நிலை பரிதாபமாக உள்ளது. மழைக்காலத்தில் நீரை சேமிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையிடம் நீர் மேலாண்மைக்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. மழைநீர் தேங்கி பழமையான கோவில்களின் சுவர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் அவற்றை உயர்த்தி சாலைகள் அமைக்கப்படுகிறது.
இதனால், கோவில்கள் மூழ்கி, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியவில்லை. மழைநீருக்கு சுற்றுச்சுவர் அமைத்தும், தனி வடிகால் அமைத்தும் தேங்கிய மழைநீரை வெளியேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கோவிலுக்குள் மழைநீர் செல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம்.
ஆனால், பக்தர்களின் பணத்தில் மட்டும் அக்கறை செலுத்தும் அறநிலையத் துறைக்கு இதைப் பற்றிச் சிந்திக்கவே நேரமில்லை போலிருக்கிறது. கோவில்கள் விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் அரசும், அறநிலையத்துறையும், இயற்கை சீற்றங்களில் இருந்து கோவில்களை பாதுகாக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.