கோவை: கோவையில் தடையை மீறி கூட்டம் நடத்திய வழக்கில் இருந்து இந்து மக்கள் கட்சி அமைப்பு தலைவர் அர்ஜூன் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2018ஆம் ஆண்டு கோவையத்துப்பாளையம் மயானத்தில் அமைந்துள்ள வீரகணேஷ், சிவக்குமார் சமாதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆடிப்பெருக்கு வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வழக்கில் தடையை மீறி கூடியதாக இந்து மக்கள் கட்சி அமைப்பு தலைவர் அர்ஜூன் சம்பத், தொழிற்சங்க தலைவர் சீரநாயக்கன்பாளையம் ராம்ஜி, தண்டராணி நிர்வாகி காந்திபாபு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோத கூட்டம், ஊர்வலம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 7ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கில் இருந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பொய் வழக்குகள்… இந்து மக்கள் கட்சி சார்பில் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே தடை விதிப்பதும், அர்ஜூன் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால், இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை.
அதேபோல், சட்டவிரோதமாக கூடியிருந்த வழக்கில் இருந்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் வினோத்குமார், உமாசங்கரி, நந்தகோபால் மாணிக்கம் ஆகியோருக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.