சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வெறும் வாய்பேச்சிலேயே முடிவதா என்ற கேள்வியை அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் அறிவிக்கப்படுகிற நிலையிலும், அவரே பிறப்பித்த GO.354 என்ற அரசாணைக்கு தடையாக செயல்படுவது வரலாற்றுப் பிழையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிலையை உணர்ந்து, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு மருத்துவர்கள் போராட்டத்தின் போது, அந்த நேரத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததும், திமுக ஆட்சி அமைந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததும் அவர் நினைவூட்டினார். ஆனால், இன்று வரை அந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் கூட அரசாணை 354 ஐ அமல்படுத்த அரசுக்கு உத்தரவு வழங்கியிருந்தாலும், மருத்துவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றார். இதைத் தொடர்ந்து, அந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி ஜூன் 11ஆம் தேதி மேட்டூரில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கும் முன்னதாகவே, கடந்த 12 ஆண்டுகளில் குறைந்தது நான்கு ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விஷயத்தில் அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்குமா என்பது மருத்துவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.