சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படும். இதேபோல் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் இன்னும் சிறிது நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என முன்னதாக கணிக்கப்பட்டது. ஆனால், அப்படி உருவாகாமல் தாமதமானது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று மதியம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட தமிழகம் – தெற்கு ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கண்ட மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும்.
சென்னையில் மழை காரணமாக மும்பை மற்றும் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.