சென்னை: உறவுகளுக்கு இடையிலும் சண்டை, சச்சரவுகள் வருவது இயற்கை. ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்குள்ளேயே பல மாற்றுக்கருத்துகள் இருக்கிறது. ஆகவே வெவ்வேறு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் ஒன்றாக பயணிக்கும்போது பல கருத்து மாறுபாடுகள் வரத்தான் செய்யும். இந்த பதிவில் மோதல்களை ஆரோக்கியமான முறையில் கையாளுவது எப்படி என்று பார்க்கலாம்.
விஷயத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளாமலேயே பாதி கேட்டும் கேட்காமல், இப்படித்தான் இருக்கும் என்று எண்ணித்தான் பெரும்பாலான மோதல்கள் ஆரம்பமாகின்றது. காது கொடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்சனை தோன்றாது. அதுவும் இக்காலத்தில் எப்போதும் போன் கையில் வைத்துக்கொண்டு கண்கள் அதைப் பார்த்துக்கொண்டுதான் வாதங்கள் நடக்கிறது. அது விஷயத்தை விளக்குவோருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். சிலர் அதை வேண்டுமென்றே செய்வார்கள். இதை நிச்சயம் தவிர்த்தால், பூதாகரமாக வெடிக்கப்போகும் பல மோதல்களை முன்கூட்டியே ஒன்றுமில்லாமல் செய்து விடலாம்.
ஒருவர் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டிராமல், அந்த செயலால் உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூறுங்கள். இதனால் ஒரு மோதலை தவிர்த்து உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டு மறுபடியும் அந்த செயலைச் செய்யாமல் இருப்பார்கள். “நீ செய்வாய் என்று கூறிவிட்டு இப்போது மறந்துவிட்டதால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று கூறுவதற்கும், “நீ எல்லாவற்றையும் மறந்துவிடு, நீ மிகவும் சோம்பேறியாகிவிட்டாய், எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை” என்று கூறுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
பெரும்பாலும் நம்முடைய கண்ணோட்டம்தான் சரியானது அது மற்றவர்க்கு கட்டாயம் புரியவேண்டும் என்று எண்ணுபவர்களே அதிகம். அதை விடுத்து, உங்களவருக்கு உங்கள் கண்ணோட்டம் புரிந்ததா என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் அவருக்கும் அந்த உணர்வு இருக்காது. அதனால்தான் மோதல் ஆரம்பம் ஆகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் சிறுவயது முதல் பார்த்துப் பழகிய ஒரு தோழி உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராக உணர்வீர்கள். அதனால், அவருடன் நேரம் செலவிடுவதும், அவர் அழைக்கும் விருந்திற்கு செல்வதை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் நீங்கள் கருதுவீர்கள்.
ஆனால், உங்கள் கணவருக்கு அதே உணர்வு இருக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவரை வலியுறுத்துவதும் நிச்சயம் ஒரு கருத்து வேறுபாட்டிற்கு தயாராகிறீர்கள் என்று அர்த்தம். இங்குதான் நீங்கள் மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.