ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, மக்களின் எதிர்ப்பையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குரலையும் முற்றிலும் புறக்கணிப்பதாகும். இந்த அனுமதி உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சீமான் மேலும் கூறியதாவது:
“ராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பகுதி. இந்தியாவில் உள்ள ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடா இங்கு அமைந்துள்ளது. இங்கு அரிய பவளப்பாறைகள், மீன்கள், கடல் உயிரினங்கள் வாழ்கின்றன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த உயிரியல் அமைப்பு முற்றிலும் சீர்குலையும் அபாயம் உள்ளது.”
மேலும் அவர், “ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான பணிகள் நிலப்பரப்பையும் கடற்கரையோர வாழ்விடங்களையும் அழிக்கும். இது உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதிக்கும். திமுக அரசு 2019 முதல் 2023 வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக உறுதி மொழி அளித்தபோதும், இன்று அனுமதி வழங்கியிருப்பது மக்களுக்கு துரோகம். மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் இவ்வாறு அனுமதி வழங்கியிருப்பது மேலும் கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டார்.
சீமான் எச்சரிக்கை விடுத்து, “இந்த அனுமதியை திரும்பப் பெற மாநில அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம்” எனக் கூறியுள்ளார்.