திருவனந்தபுரம்: கேரள தொழில்துறை இயக்குனராக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். 2013 கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவரது சொந்த ஊர் நாமக்கல். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக ‘மல்லு இந்து அதிகாரிகள்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை ஆரம்பித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முஸ்லிம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக தனி வாட்ஸ்அப் குழுவையும் தொடங்கினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரனுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது போனை யாரோ ஹேக் செய்து வாட்ஸ்அப் குரூப் தொடங்கியிருப்பதாகவும் கோபாலகிருஷ்ணன் கூறினார். ஆனால் விசாரணையில் அது பொய் என்பது தெரியவந்தது. இதையடுத்து தொழில்துறை இயக்குனர் பதவியில் இருந்து கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதேபோல், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக் மீதான புகாரில் விவசாயத் துறையின் தனிச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், மத மோதலை ஏற்படுத்த முயன்ற ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கேரள டிஜிபியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.