மதுரை: அஜித் குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு இட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.