சென்னை: தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இல.முத்தரசன் கூறியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் இல.முத்தரசன் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அவரது முக வடிவிலான முகமூடியை அணிந்து கொண்டு அல்வா கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்ஜெட்டில் தமிழகத்தின் புறக்கணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், ஆர்.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத்துக்கு முன் பேட்டியளித்த பிரதமர், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, பார்லிமென்டை பயன்படுத்த வேண்டும். ஆனால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பிரதமரின் கருத்துக்கு எதிரானது. தேச விரோத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை தமிழகத்தில் பாஜக அரசு மாற்ற வேண்டும். இல்லையெனில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தால் கருப்புக் கொடி காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். தமிழகத்தை புறக்கணிக்கும் போது, அவரும் நமக்கு பிரதமராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.