சென்னை: ஒரு பெண் எப்பொழுது முழுமையடைகிறாள் என்றால், அவள் தன் குழந்தைக்குத் தாயாகும் பொழுது தான். தாய்மை அடைதல் என்பது ஒரு பெண்ணுக்குள் உண்டாகும் அளவிட முடியாத ஆனந்த அனுபவமாகும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண்ணாக இருந்தாலும், எவ்வித நெருடலுமின்றி வாரி அணைத்துக் கொள்பவள் தான் தாய்.
அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்தி, அல்லும் பகலும் வளர்ப்பாள். தன்னுடல் நோக தன்னை வருத்தி, கண் விழித்து, தன் சுக துக்கம் பாராமல், தன் குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய்க்கு, பிறந்தது ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மகளைப் பெற்றுள்ள அன்னையா நீங்கள்? அப்படியென்றால், பெண்களுக்கான பொழுதுபோக்குகள் மற்றும் உணர்வுப் பரிமாற்றங்களுக்கு வேறு ஒரு தோழியைத் தேட வேண்டிய அவசியமே இராது. பெண் குழந்தை என்பது ஒரு தாய்க்குக் கூடுதல் சாதகமான விஷயம். குழந்தையே அவளுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள். ஒரு தாய்க்கு ஆண்குழந்தையை விட பெண்குழந்தையிடம் தான், அதிக நெருக்கமாக மட்டும் இல்லாமல், ஒரு தோழியாகவும் இருக்க முடியும். இப்போது பெண் குழந்தையைப் பெற்ற ஒரு அன்னையானவள் அடையும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
தொலைபேசியைத் தேடி எடுத்து தோழியுடன் உரையாட வேண்டிய அவசியமில்லை. மகளையே தோழியாக்கிக் கொண்டு, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். கணவரோ, மகனோ பெண்களின் பேச்சுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் இருந்தாள் நிச்சயமாக உணர்வுகளையும், பேச்சையும் காது கொடுத்துக் கேட்பாள்.
ஓய்வு நேரத்தை மிகவும் இனிமையாக செலவளிக்கலாம் என்பது ஒரு சாதகமான விஷயம். ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனைத் தயக்கமின்றி செய்யலாம். உதாரணமாக, இருவரும் புதிய வகை உணவுகளைத் தயாரிக்க முயலலாம். அப்போது ஜோக்கடித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருந்தால், நேரம் இனிமையாகக் கழியும். மென்மையான ரொமான்டிக் நகைச்சுவைத் திரைப்படங்களையோ, டிவியில் மெகா சீரியல்களையோ மகளுடன் சேர்ந்து காணலாம்.
தையல், சமையல், அலங்காரம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால், மகளுக்கும் ஆர்வம் இருக்கக்கூடும் அல்லது இவற்றைக் கற்றுக் கொடுக்கலாம். அப்பொழுது தான் இருவரும் அவற்றைப் பற்றி விவாதித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, இருவரும் சேர்ந்து செய்து மகிழ முடியும்.
ஆடைகளிலும், அலங்காரப் பொருள்களிலும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள நவீன ஃபேஷன்கள் குறித்து விவாதித்துத் தெரிந்து கொள்ளலாம். லேட்டஸ்ட்டாக வந்துள்ள டிசைன்கள் மற்றுன் ஃபேஷன்கள் குறித்து, இன்றைய தேதி வரையிலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். புதிதாக வாங்கியுள்ள ஆடைகள் உங்களுக்கு எப்படி இருக்கின்றன, கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உடலுக்கு நன்றாக இருக்கும் எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் வரும் ஒரே பதில் ‘இந்த ட்ரெஸ்ஸில் நீ அழகா இருக்காய்!’ என்பதாகத் தான் இருக்கும்.