கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ. 17-லிருந்து ரூ. 19 ஆக வரும் மே 1-ம் தேதி வங்கி இருப்புச் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.6-லிருந்து ரூ. 7. ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்துள்ளதே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு வங்கிகளில் பணம் எடுக்க வங்கிகளுக்குச் சென்று டோக்கன் வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டியிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கிக்கு செல்லாமல் எந்த நேரத்திலும் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நடைமுறைக்கு பிறகுதான் வங்கி ஊழியர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் நிம்மதி அடைந்தனர். மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் இலவச பணம் எடுக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டணத்தை 3 மடங்குக்கு மேல் உயர்த்தி இருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக பணப் பரிமாற்றத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 2013-ல் 222 கோடியாக இருந்த மின்னணு பணப் பரிமாற்றம், 2024-ல் 20,784 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2758 லட்சம் கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதில், Google Pay மற்றும் PhonePe போன்ற UPI மூலம் பணப் பரிமாற்றத்தின் பங்கு மிக அதிகம். 2019-ல் 34 சதவீதமாக இருந்த UPI பணப் பரிமாற்றம் 2024-ல் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. UPI வசதி மூலம் பணப் பரிமாற்றம் 100 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த மின்னணு பணப்பரிவர்த்தனை மேம்பாட்டை இந்தியா உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளது என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளக்கூடிய விஷயம். இந்த அளவிலான வளர்ச்சியால், கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களின் சுமை அதிகரிக்கும் போது, கட்டணத்தைத் தவிர்க்கும் முயற்சியில் பொதுமக்கள் பழைய முறைக்கே திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதம் உட்பட பல கட்டணங்களை கழிக்கின்றன.
வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கட்டணம் மற்றும் அபராதம் வசூலிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டினாலும், இதுபோன்ற ஏடிஎம் செலவுகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது. இதற்கான தீர்வாக வங்கிகள் பெறும் வட்டி உள்ளிட்ட பிற வருமானத்தில் இருந்து செலவுகளை ஈடுகட்ட வேண்டும்.