தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் தொடங்கிய மழை முதலில் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது.
மதுரை மாநகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை உடனடியாக முன்னெடுத்தனர். இதனால் மதுரையில் சில நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. அதே நேரத்தில் மதுரையில் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசனும் மக்களுக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின், மதுரை வந்த முதல்வர், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மதுரையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் நடக்காமல் இருக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்துக்கு சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் செல்லூர் கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேற ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் கால்வாய் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.