தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவுகள், டிரம்ப் அரசு விதித்த 50% வரி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. 600 கண்டெய்னர்களில் சுமார் 500 டன் இறால் மற்றும் கணவாய் அனுப்பப்பட்ட நிலையில், அமெரிக்க வர்த்தகர்கள் அதிக வரியை ஏற்க மறுத்ததால் கப்பல் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக ஏற்றுமதியாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒரு 40 அடி ரீஃபர் கண்டெய்னரை அமெரிக்காவுக்கு அனுப்ப ரூ.8.81 லட்சம் செலவாகிறது. எனவே 600 கண்டெய்னர்களுக்கான செலவு குறைந்தபட்சம் ரூ.35 கோடி முதல் ரூ.50 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கட்டணங்கள் எரிபொருள் விலை மற்றும் இலக்கு துறைமுகத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன. வரி காரணமாக இந்திய கடல் உணவுகள் அதிக விலை கொண்டதாக மாறியுள்ளதால், வியட்நாம், பங்களாதேஷ், ஈக்வடார் போன்ற நாடுகள் மலிவு விலையில் அமெரிக்க சந்தையை கைப்பற்றியுள்ளன.
CRISIL நிறுவன அறிக்கையின்படி, இந்த வரியால் இந்தியாவின் இறால் ஏற்றுமதி 15-18% வரை குறையக்கூடும் எனவும், கடந்த நான்கு ஆண்டுகளாக வளர்ச்சி இன்றி இருந்த கடல் உணவுத்துறை மேலும் 18-20% வருவாய் இழக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழ் நாட்டின் முக்கிய வருமான மூலங்களில் ஒன்று கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இது கடல் உணவு துறையையே மட்டும் அல்லாமல், ஆடைத் துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையின் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், அமெரிக்காவுக்கு பொருட்களை அனுப்ப முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டின் பொருளாதாரம் முழுவதும் பாதிக்கப்படுகின்ற நிலையில், இந்த வரி தொடர்பான பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.