சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரியும், தமிழக கடலோரப் பகுதிகளில் 98 டிகிரியும், மலைப் பகுதிகளில் சராசரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி, கரூர், ஈரோட்டில் 103 டிகிரி, திருப்பத்தூரில் 101 டிகிரி, தருமபுரி, மதுரை, திருத்தணியில் 100 டிகிரி, சென்னையில் 99 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. கூடுதலாக, தென்னிந்தியாவின் வளிமண்டல தாழ்வான பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக நேற்று தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.
இதனால் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஒரு சில இடங்களில் சற்று உயர வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதனால், சில இடங்களில் அசௌகரியமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி முதல் 99 டிகிரி வரை இருக்கும்.