
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டை விட 2024ல் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காவல்துறை மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டியே செய்த கண்காணிப்புகள் காரணமாக மனித உடலுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக கொலை, காயம், கலவரங்கள் போன்றவை குறைந்துள்ளன.
2017 முதல் 2020 வரை கொலை வழக்குகள் உயர்ந்த நிலையில், 2019ல் 1,745 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2021 முதல் தொடர்ந்து அந்த எண்ணிக்கை குறைந்து 2024ல் 1,563 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகளாகும். 2012ல் மாதத்திற்கு சராசரியாக 161 கொலை வழக்குகள் இருந்த நிலையில், தற்போது 130 ஆக குறைந்துள்ளன. 2025ல் (ஏப்ரல் வரை) இது மேலும் 120 ஆக குறைந்துள்ளது.
2024ல் ரவுடி கொலைகளும் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 501 கொலை வழக்குகள் இருந்த நிலையில், 2025ல் அதே காலக்கட்டத்தில் 483 வழக்குகளாக குறைவடைந்துள்ளது. திடீர் தூண்டுதல், குடும்ப பிரச்சனைகள், விவாகத்திற்குப் பிந்தைய உறவுகள் போன்றவற்றால் நிகழும் கொலைகளை கட்டுப்படுத்த முடியாது என்றாலும், ரவுடி மற்றும் பழிவாங்கும் கொலைகளை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்களில் தீர்வு பெறும் வழக்குகளுக்கு விரைவான விசாரணை நடத்தி தண்டனை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரவுடிகளை கண்காணிக்கும் OCIU பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகமான சரித்திர குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ல் 1,929 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 2024ல் இது 3,645 ஆக உயர்ந்துள்ளது. 2025ல் ஏப்ரல் மாதம் வரை 1,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், ரவுடிகளை A+ மற்றும் A பிரிவுகளாக வகைப்படுத்தி கண்காணிக்க வசதியாக்கப்பட்டுள்ளது. DARE அதிகாரிகள் ஒவ்வொரு ரவுடியையும் நேரடியாக கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். சிறையிலிருந்தே சதித்திட்டம் தீட்டும் ரவுடிகளை கண்காணிக்க சிறைச்சாலைகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முன்னெச்சரிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் தமிழகத்தில் கொலைகளை குறைப்பதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் காரணமாக உள்ளன.