மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்வரத்து வேகமாக நிரம்பி வருகிறது.
இதனிடையே அங்குள்ள அணைகளை பாதுகாக்க வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5,054 கன அடியாகவும், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 16,577 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று 43.83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், நீர் இருப்பு 14.14 டிஎம்சியில் இருந்து 15.85 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 1.71 டிஎம்சி உயர்ந்துள்ளது.