மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநில அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு கடந்த 4ம் தேதி வினாடிக்கு 1,223 கனஅடியும், 5ம் தேதி 1,281 கனஅடியும், 6ம் தேதி 1,465 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. மேலும் கடந்த 7ம் தேதி 2,832 கன அடியாகவும், 8ம் தேதி 2,149 கன அடியாகவும், நேற்று 3,341 கன அடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில், நீர்வரத்து இரு மடங்காக அதிகரித்து இன்று காலை அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 40.59 அடியில் இருந்து 41.15 அடியாகவும், நீர் இருப்பு 12.39 டிஎம்சியில் இருந்து 12.69 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. பிலிகுண்டுலு பகுதியில் உள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.