
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஃபென்சல் புயல் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும், தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 9,246 கனஅடியாகவும், நேற்று இரவு 29,021 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை 32,240 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அதிகமாக வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.39 அடியில் இருந்து 113.21 அடியாகவும், நீர் இருப்பு 80.40 டிஎம்சியில் இருந்து 83.05 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடியும், நீர் இருப்பு 2.65 டிஎம்சியும் அதிகரித்துள்ளது.