வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் நூற்றுக்கணக்கான மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், நிரந்தர தீர்வாக இரு நாடுகள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மூன்று மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் கைது தொடர்பான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த 50 நாட்களில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்கள், கைதுகள், படகுகள் பறிமுதல், அபராதம் விதிக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.