சென்னை: நேரடி வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் 4-வது இடத்தில் உள்ளதாக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். மத்திய அரசு பெறும் வரி வருவாயில் 54 சதவீதத்தை வருமான வரித்துறை வழங்குகிறது. வருவாய் இலக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.22.7 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வருவாய் தேவைப்படுகிறது.

இந்த இலக்குகளை அடைய வருமான வரித்துறை செயல்பட்டு வருகிறது. நேரடி வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி 4-வது இடத்தில் உள்ளது. இலக்கு நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ. 1.39 ஆயிரம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள், பணியாளர்கள் கடுமையாக உழைத்து, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும். 2024-25 நிதியாண்டில் ரூ. 21 ஆயிரம் கோடி வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.