ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் விளைபொருட்களில் தேங்காய்க்கு முக்கிய இடம் உண்டு. தற்போது மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயம், வட மாநிலங்களில் தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கான தேங்காய் தேவையும் அதிகரித்துள்ளது.
அதே சமயம் தேங்காய்களை கொப்பரையாக உலர்த்தி தரமான தரத்துடன் விற்பனை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக கொப்பரை உற்பத்தியை விட நேரடியாக தேங்காய்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், கொப்பரை உற்பத்தி அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை கூட்டுறவு விற்பனை கூடங்கள் மற்றும் சங்கங்களில் கொப்பரை விலை ஏற்ற இறக்கமாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கொப்பரை விலை கிலோ ரூ.85 முதல் ரூ.93 வரை இருந்தது. கடந்த மாதம் ரூ.100ஐ தாண்டியது. இந்நிலையில், நாபெட் (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு) கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரவை கொப்பரை கிலோ ரூ.116.60-க்கும், பண்டு கொப்பரை கிலோ ரூ.120-க்கும் கொள்முதல் செய்தது.
இதன் மூலம், 88,300 டன் அரவை கொப்பரையும், 2,000 டன் பண்டு கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில், கொப்பரை அதிக விலைக்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-
தற்போது தேங்காய் தேவை அதிகரித்துள்ளதால் கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைந்து வருகிறது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4,500 கொப்பரை மூட்டைகள் வரை கொண்டு வரப்பட்டது. அதாவது இந்த வாரம் 2,900 மூட்டைகள் வந்துள்ளன.
இதேபோல் அவல்பூந்துறை, எழுமாத்தூர், வெள்ளகோவில், காங்கயம் உள்ளிட்ட இடங்களிலும் தேங்காய் வரத்து குறைந்துள்ளது.அதே நேரத்தில் விலையும் உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரிக்கும் என்பதால், கொப்பரையை வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் கொப்பரை விலையும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒழுங்குமுறை கூட்டுறவு மற்றும் சங்கங்களில் கொப்பரை விலை கிலோ ரூ.96.69ல் இருந்து ரூ.118.10 ஆகவும், காங்கயத்தில் ரூ.120 ஆகவும் இருந்தது.
இது கொப்பரை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி நெருங்குவதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.