மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 31-ம் தேதி மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நேற்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1,500 கனஅடியாகவும், நேற்று இரவு 8 மணிக்கு 10,000 கனஅடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் இருந்து டெல்டா பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1,871 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 1,992 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 93.08 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.