மேட்டூர்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3191 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 42.30 அடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு திறக்கப்படும் நீரின் அளவைப் பொருத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதனால் மெயினருவி, ஐந்தருவி, இவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3087 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3191 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 41.97 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 42.30 அடியாக இருந்தது. நீர் இருப்பு 13.30 டிஎம்சி.