மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று வினாடிக்கு 6,829 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீரின் அளவு இன்று வினாடிக்கு 8,218 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 113.57 அடியாகவும், நீர் இருப்பு 83.58 டிஎம்சியாகவும் உள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் இன்று இரவு அல்லது நாளை காலை மேட்டூர் அணையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.