கொடைக்கானல்: கொடைக்கானல் முற்றிலும் காடுகளால் சூழப்பட்ட இடம். இங்கு முக்கிய தொழில் விவசாயம். இதனால் கொடைக்கானல் எந்த காலநிலையிலும் பசுமை போர்வையாக காட்சியளிக்கிறது.
இந்த விவசாயத்தை நம்பி ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கொடைக்கானலைச் சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால், மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு மாடுகள் சுற்றித் திரிவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த காலங்களில் காட்டு மாடுகள் சுற்றித் திரிந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இடையூறு செய்யாமல் இருந்த நிலையில், இன்று அந்த நிலை மாறி, தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள், மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இங்கு இரவு பகலாக சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சமீபகாலமாக மக்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் காட்டு மாடுகள் சுற்றி வருகின்றன.
இது பொதுமக்களை விரட்டுவதுடன், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் காட்டு மாடு தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், நாயுடுபுரம் செல்லும் சாலையில் உள்ள டிப்போ பகுதியில் நேற்று மதியம் காட்டு மாடுகள் கூட்டம் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தது.
அங்கிருந்த சாமானியர்களை விரட்டியது. உயிருக்கு பயந்து தாங்கள் வந்த வாகனத்தை கூட விட்டுவிட்டு உயிர் பிழைக்க ஓடினர். இதுகுறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.