சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று தீவுத்திடலில் 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தயாநிதி மாறன் எம்.பி., சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் 85 அரங்குகள் உள்ளன. 30 தனியார் அரங்குகளும் உள்ளன. ராட்சத விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகள் ரயில், பனி உலகம், அவதார் உலகம், தேவதை நிகழ்ச்சி, மீன் காட்சி, 3-டி தியேட்டர் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 40. குழந்தைகளுக்கு ரூ. 25 (4 முதல் 10 வயது வரை). மாணவர்களுக்கு சலுகைக் கட்டணம் ரூ. 25. கண்காட்சியை திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பார்வையிடலாம்.