கோவை: கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந் பேசுகையில், ”தொழில், வர்த்தகம் மற்றும் தொழில்முனைவோரின் மையமாக விளங்கும் கோவை புத்தாண்டில் புதுமை மற்றும் சிறந்த வளர்ச்சியை நோக்கி அடி எடுத்து வைக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதிக வாய்ப்புகளை உருவாக்குவோம். நிலைத்தன்மையை ஊக்குவிப்போம்.” ‘சிறுதுளி’ சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ”தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும்.
நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். இந்திய ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (டெக்ஸ்பிரசில்) துணைத் தலைவர் ரவி சாம் கூறுகையில், ”கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம், வளைகுடா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கான விமான சேவை உட்பட, உற்பத்தி துறை, சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குனர் நந்தகுமார் கூறுகையில், ”மெட்ரோ ரயில் திட்ட பணி துவக்கம். அவிநாசி ரோடு மேம்பாலம் விரிவாக்கம். ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு மையத்தின் பணிகள் புத்தாண்டின் சிறப்பம்சமாக இருக்கும். பொறியியல், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் காணும்” என்றார். இவ்வாறு அவர் கூறினார். கோவை மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், “கோவையில் தொடங்கப்பட்டுள்ள மின்சார வாகன சோதனை மையம் மூலம், புத்தாண்டில் இத்துறை சிறப்பான வளர்ச்சியை காணும்,” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பி) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா பேசுகையில், “இந்தியாவில் 2025-ல் பட்டம் பெறும் டாக்டர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நாட்டிலேயே தக்கவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இவ்வாறு அவர் கூறினார். இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும்போது, “இந்திய பம்ப் உற்பத்தித் துறையின் 100-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2025-ம் ஆண்டு கூடுதல் சிறப்புமிக்க ஆண்டாகும். புதிய ஆண்டில் இத்தொழில் மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம்” என்றார். தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் அருள்மொழி பேசுகையில், ஜவுளித்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.