திருவள்ளூர்: சென்னையின் சுற்றுப் பகுதியில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 500 கன அடியாக உள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளை ஒட்டிய திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு (செவ்வாய்கிழமை) லேசான மழை பெய்தது. அம்மழையால், இரு மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 500 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அதே போல் பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 70 கன அடி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 50 கன அடியும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.
3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தற்போது 1,513 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 153 மில்லியன் கன அடியாகவும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,611 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.