தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சாலியமங்கலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பு இருந்ததாக சந்தேகித்து, தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் ஆகிய ஊர்களில் நான்கு வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் வசிக்கும் அகமது என்பவரது வீ்ட்டுக்கு இன்று (ஜூன் 30) காலை 6 மணிக்கு என்ஐஏ அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் சென்ற குழுவினர் காலை 11.30 மணி வரை அகமதுவிடம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.
அதேபோல் தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ ஆய்வாளர் அருண்மகேஸ் என்பவர் தலைமையில் அதிகாரிகள் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை விசாரணை நடத்திச் சென்றனர். மேலும், தஞ்சாவூர் அருகே சாலியமங்கலம் காந்திஜி ரோட்டைச் சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் அப்துல்ரஹ்மான்(26), இவரது வீட்டில் இன்று காலை என்ஐஏ கூடுதல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் 12 மணிக்கு விசாரணை முடிந்து அப்துல் ரஹ்மான் தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட சதி செய்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அதே போல் சாலியமங்கலம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் ஆதாம் சாகிப் மகன் முஜிபுர் ரகுமான் (45). இவர் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் என்ஐஏ ஆய்வாளர் சிபின் ராஜ்மோன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் விசாரணை முடிந்ததும், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் தொடர்பு இருந்ததாக கூறி முஜிபுர் ரகுமானை என்ஐஏ அதிகாரிகள் பகல் 12 மணிக்கு கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சோதனையின் போது என்ஐஏ அதிகாரிகள் சில பென்டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.