சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றிலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆர்பிஎப் வீரர்கள் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க, இந்த ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, எழும்பூர்-விழுப்புரம் வழித்தடங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 74 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விடப்பட்டது. சுமார் ரூ. 25 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, ரயில்வே போலீசார் கூறுகையில், ”ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு இணையான போலீசார் இல்லை.
பல்வேறு ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணியும் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ‘சிசிடிவி’ கேமராக்களை விரைந்து பொருத்த நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்றார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ”சென்னை ரயில்வே கோட்டம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மார்ச் மாதத்திற்குள் சென்னை-ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம்-ரேணிகுண்டா வழித்தடங்களில் முடிக்க உள்ளோம் என்றனர்.