சென்னை: தமிழகத்தில் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவர்களின் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை. அதேபோல், ‘கால் டியூட்டி’ அடிப்படையில், எப்போது பணிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தை ஒரு மணி நேரமாக மாற்றியதை கண்டித்து அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது. பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை.
விரைவாக வந்து சென்றாலும், ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்கின்றனர். மீதி நேரங்களில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் தான் சிகிச்சை அளிப்பதாகவும், மாத்திரைகள் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தபோதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில நேரங்களில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவது தெரியவந்தது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் மருத்துவர் அறை மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ”அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 4,000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் கேமரா பதிவுகளை சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை தலைமை அலுவலகத்தில் நேரடியாகக் கண்காணிக்கலாம். இதேபோல், அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலகங்களிலும் நேரடியாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.