சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 203 கல்லறைகளில் நேற்று தீவிர துப்புரவு பணி நடந்தது. மொத்தம் 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர துப்புரவு பணியின் கீழ், சாலையோரங்கள் மற்றும் சாலை மீடியன்களில் உள்ள குப்பை, கட்டுமான கழிவுகள், மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள வண்டல் மண் அகற்றுதல், சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூங்காக்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 21 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்கள் மற்றும் அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் தீவிர துப்புரவு பணி நடந்தது.இதை தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 203 மயானங்களிலும் துப்புரவு பணி நடந்தது.
இதில், அனைத்து சுடுகாடு, மயானங்களிலும் உள்ள குப்பை, கட்டுமான கழிவுகள், சுவரொட்டிகள், அங்கீகரிக்கப்படாத விளம்பர பேனர்கள் மற்றும் பலகைகள், புதர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடந்தது. அந்த வகையில், 93.38 டன் குப்பை, 65.78 டன் கட்டுமான கழிவு, மொத்தம் 159.16 டன் குப்பை மற்றும் 666 போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.