சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய மற்றும் திராவிட கட்சிகளைத் தவிர்க்கும் எந்த கட்சியோ நாம் தமிழருடன் கூட்டணிக்காக வர விரும்பினால் அதைப் பற்றி யோசிப்போம் என்றார்.
இவரது இந்தக் கூற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கான மறைமுக அழைப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சீமான் பேசும்போது, “உலகத்தின் 20 நாடுகள் எதிர்ப்பினும், தன் மக்களைக் காக்க முனைந்த தலைவர் பிரபாகரனின் வழியை நாம் பின்பற்றுகிறோம்.
எனக்கு ஒரு தலைவன், ஒரு தத்துவம், ஒரு நோக்கம், ஒரு கொள்கை உள்ளது. மொழி, இன, வேளாண்மை அடிப்படையில் பசுமை பொருளாதாரத்தை வலியுறுத்தும் அரசியல் தான் எங்களுடையது” என்றார்.
இந்த கோட்பாடுகளை நம்பும் எந்த ஒரு கட்சியும், குறிப்பாக இந்திய மற்றும் திராவிட கட்சிகளின் வரிசையில் இல்லாதவர்கள், இணைவதற்கு விருப்பம் தெரிவித்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் தெரிவித்தார். ஆனால் இதுபோன்ற கூட்டணிக்கு வர யாரும் தயாராக இருப்பதில்லை என்றும், கூட்டணி என்றால் பலருக்கு பதவி மற்றும் பணமே முக்கியம் என்பதால், தான் அத்தகையவைகளை வழங்க முடியாத நிலைமையில் இருப்பதாகவும் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு தேசிய அல்லது பெரிய பிராந்தியக் கட்சியின் வரிசையிலும் இல்லை. எனவே சீமான் கூறிய இந்த கருத்து, விஜய்க்கு நேரடி அழைப்பு இல்லாவிட்டாலும், மறைமுகமான அழைப்பாக இருக்கலாம் என்பது முக்கியமாக பேசப்படுகிறது.
முக்கியமாக, தமிழக அரசியல் களத்தில் தற்போது தனித்தன்மையாக இயங்கும் இரண்டு கட்சிகள் தான் நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்பதால், எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றாகும் வாய்ப்புகள் குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.