தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் பூமி பூஜையுடன் இஸ்ரோ பணியை தொடங்கியுள்ளது. குலசேகரப்பட்டினத்தை இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக மாற்றுவதற்கான முதல் கட்ட பணியாக இன்று பூமி பூஜையுடன் பணிகளை இஸ்ரோ தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமான குலசேகரப்பட்டினத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2024 பிப்ரவரியில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அன்று இஸ்ரோ திட்டமிட்டபடி ரோகிணி என்ற சிறிய ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தொடர்ந்தன. இதற்கிடையே ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்தில் ஆப்பு அமைக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று குலசேகரப்பட்டினத்தில் 2500 ஏக்கரில் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவின் முக்கிய அதிகாரிகள் வந்துள்ளனர். இன்று அமைக்கப்பட்டுள்ள பணிகள் யுஏஎஸ் 1, யுஏஎஸ் 2 என, இந்த இடத்தில் 4 சர்வீஸ் கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இதுபோன்ற பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முடிவடைந்து, முதற்கட்டமாக இந்த பகுதியில் இருந்து சிறிய ராக்கெட்டுகளை இயக்குவதற்கு இஸ்ரோ தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.