சென்னை: மக்கள் குற்றச்சாட்டு… ரேஷன் கார்டு அச்சிடும் இயந்திரங்கள் சரிவர இயங்காததால், பணம் செலுத்தியும் நகல் கார்டு அனுப்புவதில், அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
ரேஷன் கார்டு தொலைத் தவர்கள், கார்டில் உறுப்பினர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் என திருத்தம் செய்தவர்களுக்கும் நகல் கார்டு வழங்கப்படுகிறது.
இதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கார்டு கட்டணமாக 20 ரூபாயும், அஞ்சல் கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. பலரும் நகல் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர்; ஆனால், அதை விண்ணப்பதாரர் வீடுகளுக்கு அனுப்பும் பணியில் தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்து, உணவு வழங்கல் துறை பணியாளர்களிடம் கேட்டபோது, ‘பல அலுவலகங்களில் கார்டு அச்சிடும் இயந்திரம் சரிவர இயங்குவதில்லை. இதை சரி செய்து தருமாறு, உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தான் தாமதம் ஏற்படுகிறது’ என்றனர்.
எனவே, இயந்திரம் சரியானால் தான், கார்டு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.