சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான தீபா, தனக்கு எதிரான வருமான வரி வழக்கில் ரூ.36 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு ரூ.36 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்து தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி சி. சரவணன் முன் மனு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகையை ரூ.36 கோடியிலிருந்து ரூ.13 கோடியாகக் குறைத்து திருத்தப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதைக் கவனத்தில் கொண்ட நீதிபதி, ரூ.36 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கு செல்லாது என்று கூறி தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் பெறலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.