சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் சார்பில் பெரம்பூரில் ஒற்றுமை எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் காஜா மொய்தீன் தலைமை வகித்தார். மாநில தலைவர் அப்துல்கரீம், மாநில பொதுச்செயலாளர் முஜிபு ரஹ்மான், மாநில துணை தலைவர் தாவூத் கைசர், மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து தீர்க்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நீட்டிக்கப்பட்ட ஜேபிசி இந்த மசோதாவை கைவிட பரிந்துரைக்க வேண்டும். அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை முடக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தது பாசிச ஆட்சியின் உச்சம்.
மத்திய அரசின் இத்தகைய எதேச்சதிகார மனப்பான்மையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு மாவட்ட செயலாளர் அன்சாரி கூறினார்.