தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435}ஆம் பசலிக்கான “வருவாய்த் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
வட்டங்களான பேராவூரணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரையும், பாபநாசத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், தஞ்சாவூரில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், ஒரத்தநாட்டில் தஞ்சாவூர் உதவி ஆணையர் (கலால்) தலைமையில் ஜூன் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், பூதலூரில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இதேபோல, பட்டுக்கோட்டையில் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையில் ஜூன் 4 முதல் 19 ஆம் தேதி வரையும், திருவையாறில் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 9 ஆம் தேதி வரையும், திருவிடைமருதூரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 11 ஆம் தேதி வரையும், கும்பகோணத்தில் கும்பகோணம் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 11 ஆம் தேதி வரையும், திருவோணத்தில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும், பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை, நில ஒப்படை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் குறித்தும் ஜமாபந்தி அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம்.
நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய்த் தீர்வாய அலுவலர்களிடம் விவசாயிகள் நீர் வளத் துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உட்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.